ஆமாம் நீங்கள் படிப்பது சரிதான். பாஸ்வோர்ட் எனும் தொழில்நுட்பத்தை ஒழித்துக் கட்டி புதிதாக Passkey எனும் தொழில்நுட்பம் வந்துள்ளது. வரும் காலத்தில் நாம் எதற்கும் Password பயன்படுத்த வேண்டிய தேவையில்லை ஆனால் பாதுகாப்பாக இணையத்தில் வளம் வர ’பாஸ்கீ’யை பயன்படுத்த வேண்டும். 2023 ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்பம் இது.
ஏன் Passwordல் என்ன பிரச்சனை?
உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தால் சில சிக்கல்கள் உண்டு, அதில் முதல் சிக்கல் மனிதர்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? “PASSWORD” தான். சுமார் 46 சதவீத மக்கள் இதை பாஸ்வோர்டாக வைத்துள்ளார்கள். அடுத்த பாஸ்வோர்ட் “12345”. இந்த பாஸ்வோர்ட் களை ஹேக்கர்கள் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். இப்படி மக்கள் மிக எளிதான பாஸ்வேர்டுகளை வைப்பதால் சைபர் பாதுகாப்பில் ஏகப்பட்ட பிரச்சனை.
அடுத்த சிக்கல். மக்கள் பல்வேறு கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது. இதில் நம் மக்களை எப்படி குறை சொல்ல முடியும்? நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்களில் பயணக் கணக்கு வைத்திருந்தால் எப்படி விதவிதமான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க முடியும்? ஒரே பாஸ்வர்ட் வைத்திருந்தால் தானே நினைவில் எளிதாக வைத்திருக்க முடியும். இதில் சிக்கல் என்னவென்றால், ஹேக்கர் ஒருவருடைய ஒரு பாஸ்வோர்ட் கண்டுபிடித்தால் போதும் அவர் உலாவரும் இணையத்தில் இருக்கும் அனைத்துச் செயலிகளின்/வலைதளங்களின் பாஸ்வேர்டுகளை கண்டுபிடித்ததற்கு ஈடானதாகும்.
பாஸ்வேர்ட் பயன்படுத்துவதில் உள்ள இன்னொரு சிக்கல் ஹேக்கர்கள் உங்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக வாங்கி விட முடியும்.
பாஸ்வேர்ட் எனும் தொழில்நுட்பம் ஆரம்பக் காலத்தில் மிகப் பெரிய கணினி பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும், தொடர்ந்து ஹேக்கர்கள் தங்கள் அறிவையும் திறனையும் மேம்படுத்தியதால் இந்தத் தொழில்நுட்பம் இப்போது பெரிதளவு உதவிகரமானதாக இல்லை. அதனால் நமக்கு வேறு ஒரு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அந்தத் தொழில்நுட்பம் தான் ’பாஸ்கீ.’
இது திடீரென வந்த தொழில்நுட்பம் இல்லை. கடந்த வருடமே ஆப்பிள் போன்களில் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் ஆண்ட்ராய்டு போன்களில் இந்தத் தொழில்நுட்பம் வரவில்லை. ஆனால் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’பாஸ்கீ’ தொழில்நுட்பம் என்றால் என்ன?
அண்மைக்காலம் வளர்ந்து வரும் மொபைல் மற்றும் டேப்லெட் வருகையின் உதவியுடன் இந்தத் தொழில்நுட்பம் இயங்கும். உங்களுடைய மொபைல் ஃபோனில் நீங்கள் ’பாஸ்கீ’யை அமைத்துவிட்டால் போதும். எந்தெந்த வலைத்தளங்களில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கூற வேண்டும்.
இந்த பாஸ்கீ தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட கிரிப்டோகிராபி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. உங்கள் வாட்ஸ் அப் தொடர்பு முழுக்க முழுக்க பாதுகாப்பானது, அதில் End-to-End Encryption உள்ளது எனக் கூறியிருப்பார்கள். பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ எனும் இரண்டு கருதுகோள்களை இணைத்தது தான் இந்த End-to-எண்டு Encryption முறை.
வழக்கமான பாஸ்வேர்ட் தொழில்நுட்பத்தில் உங்களுக்கு ஒரு பயனர் பெயர் இருக்கும் அதனுடன் நீங்கள் பாஸ்வேர்டை சேர்த்து உள்ளிட வேண்டும். இங்கு அதற்குப் பதிலாக பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ இணைந்து செயல்படும். இந்த பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ யின் இணைவை மென்பொருளே பார்த்துக் கொள்ளும். நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்கள் வேலை சுலபம்.
ஒரே கட்டுபாடு நீங்கள் கண்டிப்பாக உங்கள் போனில் பின் நம்பர், பேட்டர்ன் அல்லது பயோமெட்ரிக் முறை உள்நுழைவை அமைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக.
அது மிகச் சிக்கலான கணக்குகளை உருவாக்கி அந்தக் கணக்குகளைத் தமக்குள் தொழில்நுட்பமே தீர்த்துக் கொள்ளும் ஒரு முறை. அந்த மென்பொருளில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. ஒவ்வொரு முறையும் இந்தக் ’கணக்குகள்’ மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் ஒருவேளை ஹேக்கர் கையில் சிக்கினால் கூட அவரால் இந்தக் கணக்குகளைப் புரிந்து கொள்ள முடியாது (பார்க்கவே முடியாது). இன்றளவும் ஹேக்கர்களிடமிருந்து மிகப் பாதுகாப்பான ஒரு தொழில்நுட்பம் தான் இந்த பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ முறை. அதை அப்படியே பாஸ்கீ முறைக்கும் பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் மொபைல் போனில் இருக்கும் பாஸ்கீ தொடர்பான மென்பொருள், ஆரம்ப நேரத்தில் ஒரு பப்ளிக்கீயையும் பிரைவேட் கீயையும் உருவாக்கும். பப்ளிக் கீயை சர்வர்களில் பதிய வைத்து விடும். அதாவது நீங்கள் எந்த வெப்சைட்டில் இதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த ஒவ்வொரு வெப்சைட்டிற்கும் இந்த பப்ளிக் கீ பதிய வைக்கப்படும்.
நீங்கள் ஒரு வலைதளத்தில் நுழைய முற்பட்டால் அது உங்களின் பாஸ்கீயை கேட்கும். உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது உங்கள் மென்பொருள் பார்த்துக் கொள்ளும். அந்த வலைதளம் பப்ளிக் கீயை வைத்து ஒரு சிக்கலான கணிதக் கேள்வியை உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கும். உங்கள் மொபைல் போனில் உள்ள மென்பொருள் பப்ளிக் கீயின் அடிப்படையில் அந்தக் கணிதத்தைத் தீர்க்க வேண்டும். தீர்த்து விடையை அனுப்பி வைக்கும். சர்வரில் விடையைச் சரி பார்க்கும் வேலை நடக்கும். சரியான விடை என்றால் உங்களை அனுமதிக்கும். நீங்கள் பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்க வேண்டியது தான். அனைத்தையும் மென்பொருளே பார்த்துக் கொள்ளும். சுருங்கச் சொன்னால் உங்களுக்கு உங்கள் பாஸ்கீ என்னவென்று தெரியவே தெரியாது.
இதனால் ஒரு வேலை ஹேக்கர்கள் உங்கள் பாஸ்கீயை கேட்டால் உங்களுக்கே தெரியாது என்பதால் அந்த முறையில் உங்களை இனி ஹேக் செய்ய முடியாது.
அடுத்து ஹேக்கர்கள் போலியான வலைத்தளங்களை அனுப்பினாலும் அந்த வலைதளங்களில் இந்த பாஸ்கி வேலை செய்யாது என்பதால் இனிமேல் உங்களை போலி வலைத்தளங்களை வைத்தும் ஏமாற்ற முடியாது.
பாஸ் கீ மென்பொருளில் உள்ள கீ-செயின் எனும் தொழில்நுட்ப உதவியுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணக் கணக்குகளை நீங்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். ஒரு வேலை உங்களின் ஒரு நெட்ஃபிக்ஸ் பயனர் கணக்கை உங்கள் குடும்பத்தினருக்குப் பகிர வேண்டும் என்றால் அதையும் மிக எளிதாகவே பகிரலாம்.
ஆனால் இதெல்லாம் உங்கள் மொபைல் போனிலும் அல்லது நீங்கள் பாஸ்கீயை பயன்படுத்தும் சாதனத்தில் மட்டும் தான் சாத்தியம்.
ஒரு வேலை நீங்கள் முற்றிலும் மற்றொரு சாதனத்தில் உங்கள் ஈமெயிலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் உங்கள் மொபைல் போன் மற்றும் க்யூ ஆர் கோடு உதவியுடன் நீங்கள் அந்த புதிய சாதனத்தில் குறிப்பிட்ட வலைதளத்தை தாராளமாக உள் நுழைந்து பயன்படுத்தலாம்.
ஓரளவு பாஸ்வோர்ட் தொழில்நுட்பம் முன்வைத்த பல சைபர் பாதுகாப்பு சிக்கல்களை இந்த பாஸ்கீ தொழில்நுட்பம் தீர்த்து வைத்துள்ளது.
ஆனால் ஒருவேளை உங்கள் செல்போன் தொலைந்து விட்டால்?
இதற்குத் தற்காலிகமான சில தீர்வுகளை முன் வைத்திருக்கிறார்கள். பாஸ்கீ ரெக்கவரி method எனும் முறையைப் பயன்படுத்தினாலும் இன்னும் அது மிகச் சிக்கலாகத் தான் இருக்கிறது. இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சவால் இந்தச் சிக்கல்தான் இதையும் தீர்த்து விட்டால் மிக விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைத்து வலைத்தளங்களும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடும்.
FIDO Alliance எனும் ஆய்வுக் குழு தான் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பாஸ்கீ முறையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1. Password Vs Passkey
2. Passkey explained in tamil
3. How to setup passkey in tamil
4. what is passkey