ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன். கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக எளிது ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு சில வேலைகளை செய்ய முனைந்தாலே அவர்கள் படும் துன்பம் உங்களுக்குத் தெரிந்துவிடும். கண்பார்வையற்றவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏதாவது செய்ய முடியுமா?
நிச்சயம் என்கிறது அசிஸ்டிவ் டெக்னாலஜி. மனிதர்களுக்கு துணையாக இருக்க உதவும் தொழில்நுட்பத்தினை அசிஸ்டிவ் டெக்னாலஜி என்பார்கள். ஜிபிடி 4 , AI Cloud, கூகுள் கிளாஸ் உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு ஒரு புது உலகத்தையே கொடுக்க முனைந்திருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.
கூகுள் கிளாசை ஒரு பார்வையற்றவர் அணிந்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் காமிரா உதவியுடன் அவரின் சுற்றுப்புறத்தை படம் பிடிக்கும். அந்த காட்சிகள் புகைப்படங்களாக முதலில் மாற்றப்படும். Gpt4 உதவியுடன் புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்பம் உள்ளது. எடுத்த புகைப்படங்கள் இணையத்தின் வழியாக AI Cloud சர்வருக்கு அனுப்பப்படும். அந்த புகைப்படங்களை தொழில்நுட்பம் வார்த்தைகளாக மாற்றும். அந்த வார்த்தைகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் கூகுள் கிளாஸ் இருக்கு அனுப்பப்படும். கூகுள் கிளாஸ் இப்போது அந்த வார்த்தைகளை பேச்சாக மாற்றி பார்வையற்றவருக்கு தகவலை தெரிவிக்கும். கூகுள் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் செவி வழி கருவியில் அந்த பேச்சுக்கள் கேட்கும்.
மேலும் ஒரு மனிதரை அடையாளம் காணவும், தன் சுற்றுப்புறத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும். உங்கள் நண்பர் வரும் பட்சத்தில் அவர் படத்தின் உதவியுடன் கூகுள் கிளாஸ் இன்னார் என்பதை தெரிவிக்கும். உங்கள் சுற்றுப்புறத்தை விளக்கக் கூறினால் எதிரில் இருப்பவற்றை படங்களாக பிடித்து அதைப் பற்றி விளக்கும்.
நீங்கள் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் வானிலை, நடைபாதையில் உள்ள தகவல்கள், கடைகள், வண்டிகள் என நீங்கள் நடந்து செல்லும் போது உங்களுடன் ஒருவர் விளக்கமாக அதைப் பற்றி எல்லாம் விவரனையுடன் பேசிக் கொண்டிருப்பார்.
உண்மையாகவே பார்வையற்றவர்களின் வாழ்க்கை மிக மிக எளிதாகும். பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி இனி புத்தகங்களை படிக்கலாம், எழுதலாம், சமைக்கலாம், தங்கள் வாழ்க்கையை சக மனிதரைப் போன்று வாழலாம்.
அமிலியா என்கிற பிரெஞ்சு படத்தில் ஒரு காட்சி வரும் கண்பார்வை அற்றவர் ஒருவரை அமிழி கைப்பற்றிக் கொண்டு அவரை நடத்திக் கூட்டிச் செல்லும்போது அவரை சுற்றி நடக்கும் முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொண்டே வருவார். அந்த காட்சியின் முடிவில் அந்தப் பார்வையற்றவர் மிகுந்த பரவச மனநிலையின் சொர்க்கத்தை அடைந்ததைப் போல காட்டி இருப்பார்கள். நிச்சயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அத்தகைய செயலை செய்து காட்டியுள்ளது.
இனி வரும் காலத்தில் Virtual reality headset உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை செய்யும் போது மகிழ்ச்சி பொங்குகிறது நிச்சயம் அவர்களின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் சிறப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment