Showing posts with label cyber in tamil. Show all posts
Showing posts with label cyber in tamil. Show all posts

Wednesday, July 5, 2023

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

 ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக எளிது ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு சில வேலைகளை செய்ய முனைந்தாலே அவர்கள் படும் துன்பம் உங்களுக்குத் தெரிந்துவிடும்.  கண்பார்வையற்றவர்களுக்கு  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏதாவது செய்ய முடியுமா? 



 நிச்சயம் என்கிறது அசிஸ்டிவ் டெக்னாலஜி.  மனிதர்களுக்கு துணையாக இருக்க உதவும் தொழில்நுட்பத்தினை அசிஸ்டிவ் டெக்னாலஜி என்பார்கள்.  ஜிபிடி 4 , AI Cloud,  கூகுள் கிளாஸ் உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு ஒரு புது உலகத்தையே கொடுக்க முனைந்திருக்கிறார்கள்.  இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

கூகுள் கிளாசை ஒரு பார்வையற்றவர் அணிந்து கொள்ள வேண்டும்.  அதில் இருக்கும் காமிரா உதவியுடன் அவரின் சுற்றுப்புறத்தை படம் பிடிக்கும்.  அந்த காட்சிகள் புகைப்படங்களாக முதலில் மாற்றப்படும்.  Gpt4  உதவியுடன் புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்பம் உள்ளது.  எடுத்த புகைப்படங்கள் இணையத்தின் வழியாக AI Cloud   சர்வருக்கு அனுப்பப்படும்.  அந்த புகைப்படங்களை தொழில்நுட்பம் வார்த்தைகளாக மாற்றும்.  அந்த வார்த்தைகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் கூகுள் கிளாஸ் இருக்கு அனுப்பப்படும்.  கூகுள் கிளாஸ் இப்போது அந்த வார்த்தைகளை பேச்சாக  மாற்றி பார்வையற்றவருக்கு தகவலை தெரிவிக்கும்.  கூகுள் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் செவி வழி கருவியில் அந்த பேச்சுக்கள் கேட்கும். 

மேலும்  ஒரு மனிதரை அடையாளம் காணவும்,  தன் சுற்றுப்புறத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும்.  உங்கள் நண்பர் வரும் பட்சத்தில் அவர் படத்தின் உதவியுடன் கூகுள் கிளாஸ் இன்னார் என்பதை தெரிவிக்கும்.  உங்கள் சுற்றுப்புறத்தை விளக்கக் கூறினால் எதிரில்  இருப்பவற்றை படங்களாக பிடித்து அதைப் பற்றி விளக்கும். 

 நீங்கள் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால்   வானிலை,  நடைபாதையில் உள்ள தகவல்கள்,  கடைகள்,  வண்டிகள்  என நீங்கள் நடந்து செல்லும் போது உங்களுடன் ஒருவர் விளக்கமாக அதைப் பற்றி எல்லாம் விவரனையுடன் பேசிக் கொண்டிருப்பார். 

 உண்மையாகவே பார்வையற்றவர்களின் வாழ்க்கை மிக மிக எளிதாகும்.  பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி இனி புத்தகங்களை படிக்கலாம்,  எழுதலாம்,  சமைக்கலாம்,  தங்கள் வாழ்க்கையை சக மனிதரைப் போன்று வாழலாம். 


 அமிலியா என்கிற பிரெஞ்சு படத்தில் ஒரு காட்சி வரும் கண்பார்வை அற்றவர் ஒருவரை அமிழி கைப்பற்றிக் கொண்டு அவரை நடத்திக் கூட்டிச் செல்லும்போது அவரை சுற்றி நடக்கும் முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொண்டே வருவார்.  அந்த காட்சியின் முடிவில் அந்தப் பார்வையற்றவர் மிகுந்த பரவச மனநிலையின் சொர்க்கத்தை அடைந்ததைப் போல காட்டி இருப்பார்கள்.  நிச்சயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அத்தகைய செயலை செய்து காட்டியுள்ளது.


இனி வரும் காலத்தில் Virtual reality headset உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை செய்யும் போது மகிழ்ச்சி பொங்குகிறது நிச்சயம் அவர்களின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் சிறப்பாக இருக்கும்.




Gene origami என்றால் என்ன?

 மரபணு ஒரிகமி என்று ஒரு தொழில்நுட்பம் உள்ளது.  அதேதான் ஒரிகமி என்றால்  நீங்கள் காகிதத்தை வைத்து பல உருவங்கள் செய்கிறீர்களே  அதேதான் ஆனால் இங்கு நாம் மரபணுவை வைத்து  பல வடிவங்களை செய்யப் போகிறோம்.  ஏன் செய்ய வேண்டும்?

Targeted Drug delivery என்று மருத்துவத்தில் ஒரு தேவை உள்ளது.  நீங்கள் மருந்துகளை உட்கொள்ளும் போது அதன் பக்க விளைவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பில் சிக்கல் என்றால் அந்த உடல் உறுப்பிற்கு தேவையான மருந்தை தான் கொடுப்பார்கள்.  அந்த மருந்து சிக்கலுக்குள்ளான உடல் உறுப்பை சரி செய்யும்.  ஆனால் அதே மருந்து ரத்தத்தில் கலந்து வேறு ஒரு உடல் உறுப்புகுள் சென்றால் அங்கே புது சிக்கல்களை உருவாக்கும்.  மருத்துவத்தில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை இதை தீர்க்கத்தன் டார்கெட்டட் டிரக் டெலிவரி என்ற ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் கொடுக்கும் மருந்து எந்த உடல் உறுப்பு தேவையோ அங்கு சரியாக மருந்தை செலுத்துவது.

 நம்மிடம் மருந்து உள்ளது ஆனால் அதை குறிப்பிட்ட உடல் உறுப்பு எப்படி செலுத்துவது என்பதுதான் இந்த ஆய்வுகள்.  அதில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தீர்வு இந்த  மரபணு ஒரிகமி. #NanoBilogy எனும் தொழில்நுட்பத்தின்  உதவியுடன் மரபணு Scaffolds  கொண்டு ஒரு மருந்தை குறிப்பிட்ட உடல் உறுப்பிற்கு செலுத்துவதற்கு தேவையான ஒரு வடிவத்தை உருவாக்குவார்கள்.  நம் புரிதலுக்காக சொல்கிறேன் ஒரு பெட்டி போன்றோ அல்லது ஒரு பந்து போன்றோ மரபணு ஸ்கேப் போல்டுகளைக் கொண்டு ஒரு வடிவத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட மருந்தை செலுத்தும் போது எந்த உடல் உறுப்பிற்கு தேவையோ அங்கு செல்லும். 


 நான் இதை எளிதாக விளக்கி விட்டேன் ஆனால் இது மிகவும் சிக்கலான ஒரு தொழில்நுட்பம்.  ஒவ்வொரு உடலுறுப்பிற்கும் தேவையான வடிவத்தை கண்டுபிடிப்பதும் அந்த வடிவத்தை பின்னுவதும் மிகவும் சிக்கலானது.  அண்மைய காலம் சில நம்பிக்கையான முடிவுகளை இந்த ஆய்வுகள் கொடுத்துள்ளது வரும் காலத்தில் இது மிகப்பெரிய துறையாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Monday, May 15, 2023

எச்சரிக்கை! Telegramல் இலவசமாக படம் பார்ப்பவரா?


Telegram இல் உங்களுக்கு ஏன் ஒருவர் இலவசமாக படங்களை கொடுக்க வேண்டும்?  ஒரு படத்திற்கு டிக்கெட் செலவு ஆகக்கூடாது,  ஒரு ஓடிடிக்கு  சப்ஸ்கிரைப் பணம் கொடுக்க வேண்டாம் என்று நீங்களே பணத்தை மிச்சம் பிடிக்க telegramல் படத்தை டவுன்லோடு செய்கிறீர்கள்.  உங்களுக்கு பணம் மீது எவ்வளவு அக்கறை இருக்கும்போது உங்களுக்கு இலவசமாக கொடுப்பவர் மட்டும் சமூக சேவையா செய்வார்?

 டெலிகிராமில் படங்களை தரவிறக்கம் செய்வதிலும் பலவிதமான பாட்களை  அதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது அதைப்பற்றி நாம் தெரிந்து கொண்டு எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

 telegram என்பது இன்று பலராலும் பயன்படுத்தப்படும் சேட் ஆப்.  உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.  தகவல் பரிமாற்றத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மிக முக்கியமான செயல் இது என பலர் நினைக்கிறார்கள்.  ஆனால் டெலிகிராமில் எதிர்பாராத விதமாக ஒரு முழு திரைப்படத்தையும் பகிரும் அளவு  வசதிகள் உள்ளது.  இதனால் விரைவிலேயே டெலெக்ராம் செயலி என்பது இலவசமாக புதிய படங்களை தரவிறக்க பயன்படுத்தப்பட்டது.

 தமிழ் ராக்கர்ஸ் அடுத்தபடியாக இன்று டெலிகிராமில் உலகம் முழுவதும் உள்ள படங்கள் மற்றும் ஓடிடி களில் வெளிவரும்  வெப் சீரியஸ்கள் பகிரப்பட்டும் தரவிறக்கப்பட்டும் வருகிறது இதற்காக யாரும் பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

 ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது.

 இந்த இலவச படங்களின் மூலம் சைபர் கிரிமினல்கள் ஏற்கனவே உங்கள் ஃபோன்களிலும் லேப்டாப் களிலும் நுழைந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?


 சைபர் கிரிமினல்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒரு போன் உள்ளும் லேப்டாப் உள்ளும் நுழைவது மிகவும் கடினமான ஒரு செயல் அப்படி அவர்கள் நுழைந்து விட்டால் உடனடியாகவோ அல்லது பல நாட்கள் உங்கள் பூனை வேவு பார்ப்பதின் பல லாபங்கள் உண்டு.

  1.  நேரடியாக உங்கள் பணத்தை திருடுவது.

  2.  உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடி அதை டார்க் நெட்டில் விற்பதின் மூலம் பணம் பார்ப்பது.

  3.  உங்களை மெல்ல வேவு பார்ப்பது.

  4.  உங்களை ஏமாற்றி தவறான விஷயங்களில் முதலீடு செய்ய வைப்பது.

  5.  ரான்சம்வேர் எனும் முறையில்  உங்கள் போனை முடக்கி  பணயமாக பணம் கேட்பது.

 மேலே நாம் பார்த்த சைபர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் மால் பெயர்களை உங்கள் போனில் செலுத்த வேண்டும்.  மால் வேர்களை லிங்க் மூலம் அனுப்பி நீங்கள் கிளிக் செய்தால் தான் அந்த மால்வர் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் நுழையும்.  அவ்வளவு எளிதாக நீங்கள் கிளிக் செய்து விட மாட்டீர்கள்.  ஒருவரை அந்த கிளிக் செய்ய வைக்க சைபர் கிரிமினல்கள் பல உளவியல் வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.


 ஆனால் இந்த இலவச திரைப்படங்கள் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. 

இதை நீங்கள் புரிந்து கொள்ள சைபர் கிரைமில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,

  1.  Malware Bundling

  2. Malvertising

Malware Bundling: இந்த முறையில் மால்வேர்களை  உண்மையான அப்ளிகேஷன் ஓடும் அல்லது திரைப்படம் பாடல்களோடும் இணைத்து சேர்த்து விடுவார்கள்.  இதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடலையும் படத்தையும் தரவிருக்கும் போது அதனுடனே மாபெரும் உங்கள் லேப்டாப் அல்லது ஃபோனில் டவுன்லோட் ஆகிவிடும். 

 ஒரு மால்வேர் என்பது  தீங்கான  செயலி.  அது உள்ளே வந்து விட்டால் போதும் உங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்காது நேரடியாக போய் உங்கள் போனை அடிமட்டம் வரை ஹேக் செய்து விடும்.


Malvertising: Telegramல் படம் டவுன்லோட் செய்த அனைவருமே இந்த  Malvertisingஐ  பார்த்திருப்பீர்கள்.  தீங்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அட்வர்டைஸ்மென்ட் பக்கம் தான் Malvertising page. Malvertising  என்றால் malicious advertising என பொருள்.
நீங்கள் படத்தை டவுன்லோட் செய்யும் பக்கத்தில் “DOWNLOAD”  என்ற வார்த்தை அல்லது பட்டன்கள் பல இருக்கும் அதில் தெரியாமல் நீங்கள் ஒரு டவுன்லோட் பட்டனை அழுத்தி விட்டால் உங்களுக்கே தெரியாமல் தீங்கான செயலி உங்கள் போனுக்குள் நுழைந்து விடும்.  நிற்க இப்போதெல்லாம் இந்த பக்கத்தை நீங்கள் திறந்தாலே அந்த நொடியில் தீங்கான செயலிகள் உங்கள் போனுக்குள் நுழைந்து உங்கள் போனை ஹேக் செய்து இருக்கும்.

 இதைப்பற்றி நான் விளக்கும் போது பலரும் என் போனில் என்ன இருக்கிறது?  என்னிடம் பணமே இல்லை.  அவர்கள் ஹேக் செய்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று அலட்சியமாக கூறுவார்கள்.  உங்கள் போனில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது மிகக் குறிப்பாக உங்களைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் இருக்கிறது இந்த தகவல்களை வைத்து உங்களை மிக எளிதாக குறி வைக்க முடியும்.  அனைத்துமே ஒரு நொடியில் பணம் திருடுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.  அப்படியல்ல ஹாக்கர்கள் வேவு பார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி டார்க் நெட்டில் விற்கலாம். 

 இல்லை என்றாலும் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி உங்களுக்கே தெரியாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போன் நம்பர்களையும் திருடி அவர்களுக்கு உங்களை உங்களிடம் இருந்து தவறான செய்திகளை அனுப்பி அவர்கள் போன்களையும் மிக எளிதாக ஹேக் செய்து விட முடியும்.  யோசித்துப் பாருங்கள் உங்கள் குடும்பத்தினரும் இதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  ஒரு வேலை உங்கள் போனில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெண்களின் புகைப்படங்களோ குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அது டார்க் நெட்டில் மிகப்பெரிய விற்பனைக்கான பொருள்.  உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டின் பெண்கள்  குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைத்து விட்டீர்கள்.


 அடுத்ததாக இலவச திரைப்படங்கள் தரவிறக்கம் செய்வதற்காக நீங்கள் பல்வேறு டெலிகிராம் குழுக்களில் சேர வேண்டி இருக்கும்.  அப்படி  சேர்ந்த குழுக்களைப் பற்றி நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் ஆனால் கொஞ்சம் கவனித்து பாருங்கள் அவை மெல்ல மெல்ல  போலியான டிரேடிங் குழுக்களாக மாறி இருக்கும். 

 இலவசமாக படங்களை தரவிறக்கம் செய்யும் பெண்களை குறி வைத்து இந்த டிரேடிங் குழுக்கள் இயங்குகின்றன.  ஒரு பக்கம் அந்தப் பெண்களின் அந்தரங்க தகவல்கள் புகைப்படங்கள் சைபர் கிரிமினல்களுக்கு ஒரு வியாபாரம் என்றால்.  மறுபக்கம் அப்பாவியான பெண்களும்,  அல்லல்படும்  ஊழியர்களும் இவர்களின் குறி.

 இலவச திரைப்படங்கள் என்று டிரேடிங் குழுக்களாக மாற்றப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆசை காட்டி கொஞ்சம் முதலீடு போட்டால்  நிறைய பணம் சம்பாதிக்கலாம்; பங்கு சந்தை முதலீடு ஆலோசனைகள் கொடுக்கிறோம்;  கிரிப்டோ கரன்சி முதலிட ஆலோசனைகளை கொடுக்கிறோம் என்று ஆசை வலை விரிப்பார்கள் அதில் சிக்கி பல லட்சங்களில் பணத்தை இழந்தவர்கள் அதிகம்.  ஒரு முறை நீங்கள் இவர்களிடம் சிக்கிவிட்டால் உங்கள் பணம் கிடைப்பது மிகவும் கடினம் நீங்கள் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தால் கூட பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 இதைப்பற்றி விளக்கினாலும் பலர் என்னிடம் பணமே இல்லை,  நான் ரொம்ப உஷார் ஏமாற மாட்டேன் என்று கூறுகிறார்கள்.  உண்மையாகவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து இதிலிருந்து எல்லாம் தப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்ச்சிதான் ஆனால் ஒரு வேலை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற அக்கறையில் தான் நான் இதை விளக்குகிறேன்.

 மகிழ்ச்சியுடன் டெலெக்ராமை பயன்படுத்துங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.


Thursday, May 4, 2023

Passwordன் மரணம்: இனி Passkey தான் எல்லாம்.

 

ஆமாம் நீங்கள் படிப்பது சரிதான்.  பாஸ்வோர்ட் எனும் தொழில்நுட்பத்தை ஒழித்துக் கட்டி புதிதாக Passkey  எனும் தொழில்நுட்பம் வந்துள்ளது.  வரும் காலத்தில் நாம் எதற்கும் Password  பயன்படுத்த வேண்டிய தேவையில்லை  ஆனால் பாதுகாப்பாக இணையத்தில் வளம் வர  ’பாஸ்கீ’யை பயன்படுத்த வேண்டும். 2023 ல்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்பம் இது.

 

ஏன் Passwordல் என்ன பிரச்சனை?

 உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தால் சில சிக்கல்கள் உண்டு, அதில் முதல் சிக்கல் மனிதர்கள்.  உலகம் முழுவதும் உள்ள மக்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? “PASSWORD”  தான்.  சுமார் 46 சதவீத மக்கள் இதை பாஸ்வோர்டாக வைத்துள்ளார்கள்.  அடுத்த பாஸ்வோர்ட் “12345”.  இந்த பாஸ்வோர்ட் களை ஹேக்கர்கள் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.  இப்படி மக்கள் மிக எளிதான பாஸ்வேர்டுகளை வைப்பதால் சைபர் பாதுகாப்பில் ஏகப்பட்ட பிரச்சனை.


 அடுத்த சிக்கல். மக்கள் பல்வேறு கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது.  இதில் நம் மக்களை எப்படி குறை சொல்ல முடியும்? நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்களில் பயணக் கணக்கு வைத்திருந்தால் எப்படி விதவிதமான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க முடியும்?  ஒரே பாஸ்வர்ட் வைத்திருந்தால் தானே நினைவில் எளிதாக வைத்திருக்க முடியும்.  இதில் சிக்கல் என்னவென்றால்,  ஹேக்கர் ஒருவருடைய ஒரு பாஸ்வோர்ட் கண்டுபிடித்தால் போதும் அவர் உலாவரும் இணையத்தில் இருக்கும் அனைத்துச் செயலிகளின்/வலைதளங்களின் பாஸ்வேர்டுகளை கண்டுபிடித்ததற்கு ஈடானதாகும்.

 பாஸ்வேர்ட் பயன்படுத்துவதில் உள்ள இன்னொரு சிக்கல் ஹேக்கர்கள் உங்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக வாங்கி விட முடியும்.

 பாஸ்வேர்ட் எனும் தொழில்நுட்பம் ஆரம்பக் காலத்தில் மிகப் பெரிய கணினி பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,  தொடர்ந்து ஹேக்கர்கள் தங்கள் அறிவையும் திறனையும் மேம்படுத்தியதால் இந்தத் தொழில்நுட்பம் இப்போது பெரிதளவு உதவிகரமானதாக இல்லை. அதனால் நமக்கு வேறு ஒரு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.  அந்தத் தொழில்நுட்பம் தான் ’பாஸ்கீ.’


 இது திடீரென வந்த தொழில்நுட்பம் இல்லை. கடந்த வருடமே ஆப்பிள் போன்களில் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் ஆண்ட்ராய்டு போன்களில் இந்தத் தொழில்நுட்பம் வரவில்லை. ஆனால் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ’பாஸ்கீ’ தொழில்நுட்பம் என்றால் என்ன?

  அண்மைக்காலம் வளர்ந்து வரும் மொபைல் மற்றும் டேப்லெட் வருகையின் உதவியுடன் இந்தத் தொழில்நுட்பம் இயங்கும்.  உங்களுடைய மொபைல் ஃபோனில் நீங்கள் ’பாஸ்கீ’யை அமைத்துவிட்டால் போதும்.  எந்தெந்த வலைத்தளங்களில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கூற வேண்டும்.

 இந்த பாஸ்கீ தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட கிரிப்டோகிராபி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.  உங்கள் வாட்ஸ் அப் தொடர்பு முழுக்க முழுக்க பாதுகாப்பானது,  அதில் End-to-End Encryption உள்ளது எனக் கூறியிருப்பார்கள். பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ எனும் இரண்டு கருதுகோள்களை இணைத்தது தான் இந்த End-to-எண்டு Encryption  முறை.

வழக்கமான பாஸ்வேர்ட் தொழில்நுட்பத்தில் உங்களுக்கு ஒரு பயனர் பெயர் இருக்கும் அதனுடன் நீங்கள் பாஸ்வேர்டை சேர்த்து உள்ளிட வேண்டும்.  இங்கு அதற்குப் பதிலாக பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ இணைந்து செயல்படும்.  இந்த பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ யின் இணைவை மென்பொருளே பார்த்துக் கொள்ளும்.  நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்கள் வேலை சுலபம்.

ஒரே கட்டுபாடு நீங்கள் கண்டிப்பாக உங்கள் போனில் பின் நம்பர், பேட்டர்ன் அல்லது பயோமெட்ரிக் முறை உள்நுழைவை அமைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக. 


அது மிகச் சிக்கலான கணக்குகளை உருவாக்கி அந்தக் கணக்குகளைத் தமக்குள் தொழில்நுட்பமே தீர்த்துக் கொள்ளும் ஒரு முறை.  அந்த மென்பொருளில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.  ஒவ்வொரு முறையும் இந்தக் ’கணக்குகள்’ மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் ஒருவேளை ஹேக்கர் கையில் சிக்கினால் கூட அவரால் இந்தக் கணக்குகளைப் புரிந்து கொள்ள முடியாது (பார்க்கவே முடியாது).  இன்றளவும் ஹேக்கர்களிடமிருந்து மிகப் பாதுகாப்பான ஒரு தொழில்நுட்பம் தான் இந்த பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ முறை.  அதை அப்படியே பாஸ்கீ முறைக்கும் பயன்படுத்துகிறார்கள்.

 உங்கள் மொபைல் போனில் இருக்கும் பாஸ்கீ தொடர்பான மென்பொருள்,  ஆரம்ப நேரத்தில் ஒரு பப்ளிக்கீயையும் பிரைவேட் கீயையும் உருவாக்கும்.  பப்ளிக் கீயை சர்வர்களில் பதிய வைத்து விடும்.   அதாவது நீங்கள் எந்த வெப்சைட்டில் இதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த ஒவ்வொரு வெப்சைட்டிற்கும் இந்த பப்ளிக் கீ பதிய வைக்கப்படும்.

 நீங்கள் ஒரு வலைதளத்தில் நுழைய முற்பட்டால் அது உங்களின் பாஸ்கீயை கேட்கும்.  உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது உங்கள் மென்பொருள் பார்த்துக் கொள்ளும்.  அந்த வலைதளம் பப்ளிக் கீயை வைத்து ஒரு சிக்கலான கணிதக் கேள்வியை உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கும்.  உங்கள் மொபைல் போனில் உள்ள மென்பொருள் பப்ளிக் கீயின் அடிப்படையில் அந்தக் கணிதத்தைத் தீர்க்க வேண்டும். தீர்த்து விடையை அனுப்பி வைக்கும்.  சர்வரில் விடையைச் சரி பார்க்கும்  வேலை நடக்கும்.  சரியான விடை என்றால் உங்களை அனுமதிக்கும்.  நீங்கள்  பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்க வேண்டியது தான். அனைத்தையும் மென்பொருளே பார்த்துக் கொள்ளும்.  சுருங்கச் சொன்னால் உங்களுக்கு உங்கள் பாஸ்கீ என்னவென்று தெரியவே தெரியாது.

 இதனால் ஒரு வேலை ஹேக்கர்கள் உங்கள் பாஸ்கீயை கேட்டால் உங்களுக்கே தெரியாது என்பதால் அந்த முறையில் உங்களை இனி ஹேக் செய்ய முடியாது.

 அடுத்து ஹேக்கர்கள் போலியான வலைத்தளங்களை அனுப்பினாலும் அந்த வலைதளங்களில் இந்த பாஸ்கி வேலை செய்யாது என்பதால் இனிமேல் உங்களை போலி வலைத்தளங்களை வைத்தும் ஏமாற்ற முடியாது.

 பாஸ் கீ மென்பொருளில்  உள்ள கீ-செயின் எனும் தொழில்நுட்ப உதவியுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணக் கணக்குகளை நீங்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும்.  ஒரு வேலை உங்களின் ஒரு நெட்ஃபிக்ஸ் பயனர் கணக்கை உங்கள் குடும்பத்தினருக்குப் பகிர வேண்டும் என்றால் அதையும் மிக எளிதாகவே பகிரலாம்.

 ஆனால் இதெல்லாம் உங்கள் மொபைல் போனிலும் அல்லது நீங்கள் பாஸ்கீயை பயன்படுத்தும் சாதனத்தில் மட்டும் தான் சாத்தியம்.

 ஒரு வேலை நீங்கள் முற்றிலும் மற்றொரு சாதனத்தில் உங்கள் ஈமெயிலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் உங்கள் மொபைல் போன் மற்றும் க்யூ ஆர் கோடு உதவியுடன் நீங்கள் அந்த புதிய சாதனத்தில் குறிப்பிட்ட வலைதளத்தை தாராளமாக உள் நுழைந்து பயன்படுத்தலாம்.

 ஓரளவு பாஸ்வோர்ட் தொழில்நுட்பம் முன்வைத்த பல சைபர் பாதுகாப்பு சிக்கல்களை இந்த பாஸ்கீ தொழில்நுட்பம் தீர்த்து வைத்துள்ளது.

 ஆனால் ஒருவேளை உங்கள் செல்போன் தொலைந்து விட்டால்?

 இதற்குத் தற்காலிகமான சில தீர்வுகளை முன் வைத்திருக்கிறார்கள்.  பாஸ்கீ ரெக்கவரி method எனும் முறையைப் பயன்படுத்தினாலும் இன்னும்  அது மிகச் சிக்கலாகத் தான் இருக்கிறது.  இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சவால் இந்தச் சிக்கல்தான் இதையும் தீர்த்து விட்டால் மிக விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைத்து வலைத்தளங்களும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடும்.

FIDO Alliance  எனும் ஆய்வுக் குழு தான் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பாஸ்கீ முறையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 1. Password Vs Passkey

2. Passkey explained in tamil

3. How to setup passkey in tamil

4. what is passkey




 




Tuesday, May 2, 2023

எச்சரிக்கை ‘Godfather of AI’ ஏன் கூகுளை விட்டு விளகினார்?

 


செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும்  ஜெஃப்ரி ஹிட்டன்  கூகுளில் இருந்து தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.  அண்மைய காலம் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி மக்களுக்கு எச்சரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வேலையை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.   அனைவரின் மத்தியிலும் இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஹின்டன் டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  அப்போது அவர் செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக விளங்கும் கற்றல் இயந்திரங்களை உருவாக்க முனைந்தார்.  எந்திரங்கள் கற்க அடிப்படையான செயற்கை நரம்பியல் வலை நுட்பத்தை (Artificial neural network)  மேம்படுத்தினார்.  அவரின் சிந்தனையில் உருவானது தான் டீப் லேர்னிங் (Deep learning) எனும் தொழில்நுட்பம்.


 இவரின் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட பல முக்கிய நிறுவனங்கள் இவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது.  ஆனால் அவர்கள் மத்தியில் ஏலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்,  அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் சேரப் போவதாக அறிவித்தார்.  ஏலத்தில் வென்றது கூகுள் நிறுவனம். 

 இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்த பின் இவருடைய டீப் லேர்னிங் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவில் பல அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி காட்டியது.  கணினி பார்வை எனும் பிரிவிலும்,  உரையாடலுக்கு உதவும்  லார்ஜ் லாங்குவேஜ் மாடல் தொழில்நுட்பமும்  நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. 

 இன்று பரபரப்பாக இருக்கும் சாட் ஜிபிடி இவரின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதுதான்.

 அண்மையகால சேட் ஜிபிடி வளர்ச்சி இவரை மகிழ்ச்சி அடையவில்லை.  மைக்ரோசாப்ட் நிறுவனம் சேட் ஜி பி டி யை வாங்கியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் பதற்ற படத் தொடங்கியது.  அதனால் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுகளின் அறம் சார்ந்த முன்னெடுப்புகளை நிறுத்தியது.  எப்படியாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு ஜெயித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் எந்தவித அறம் இல்லாமல் வெற்றியை நோக்கி மட்டுமே கூகுள் நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இப்படி வெறிபிடித்தார் போல் நம்மால் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த முடியாது என பல அறிஞர்கள் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.  google உட்பட பல நிறுவனங்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.

 தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் நன்மைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் அதன் தீமைகளைப் பற்றி நன்கு அறிந்தவரான ஜெஃப்ரி ஹிண்டன் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க விரும்பவில்லை.


 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மிக விரிவான  கட்டுப்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வேண்டும் என்பதை ஜெஃப்ரி உறுதியாக நம்பினார்.  ஆனால் கூகுள் நிறுவனத்தில் இருந்து இதை செய்ய முடியாது என்று உணர்ந்த அவர்  அதிக சம்பளம் கொடுக்கும் அந்த வேலையை உதவியுள்ளார்.

 உலகின் மிகப்பெரிய நிறுவனம்,  அளவிற்கு அதிகமான சம்பளம்,  தொழில்நுட்பத் துறையில் பிதாமகர் என்ற பெயர் இத்தனையையும் விட்டுவிட்டு ஜெஃப்ரி இண்டன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என்று வேலையை உதவியது அனைவருமே வியப்பாக பார்க்கிறார்கள்.  இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

 பல பத்திரிகை பேட்டிகளிலும் ஜெப்ரி இன்டர்ன் தொடர்ந்து அறம் பற்றி தான் பேசுகிறார்.  தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டும் தன் கடமை அல்ல அதை மக்களுக்கு நன்மை படுத்துவதாக மாற்றுவதும்,  அறம் சார்ந்து அந்த தொழில்நுட்பம் இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதும் கூட தன் வேலை தான் என்று அவர் உலகிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளார்.

Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?


வினோத் ஆறுமுகம்- சைபர் புத்தா


 

Thursday, April 20, 2023

செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்கள் அவை உருவாக்கும் ரோபோட் கடவுள்

 Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிகள் நம்மை சுற்றி பல நூறாக பெருகிவிட்டது.  நம் செல்போனில் செயற்கை நுண்ணறிவு உள்ளது,  விரைவில் நம் வண்டிகளில் வந்துவிடும்.  நாளை நம் சமையல் கட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி முதல் கேஸ் ஸ்டவ் வரை செயற்கை நுண்ணறிவு சாதனமாக மாற வாய்ப்புகள் உள்ளது.  இப்படி அனைத்திலும் நுழைந்த செயற்கை நுண்ணறிவு பூஜை அறையில் நுழையக் கூடாதா?


 இதை தான் பக்தி செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என அழைக்கிறார்கள்.  நீங்கள் சாட் ஜிபிடி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.  செயற்கை நுண்ணறிவு அரட்டை ரோபோட்.  இதன் மாதிரியைக் கொண்டு கீதா ஜி பி டி என்னும் மென்பொருளை சிலர் உருவாக்கியுள்ளார்கள்.  இந்த மென்பொருளில் நீங்கள் பகவத் கீதை தொடர்பான கேள்விகளை கேட்டால் அதற்கான பதில்களை அந்த மென்பொருள் அளிக்கும்.  இந்து மதம் என்று இல்லை பிற மதங்களும் இனி செயற்கை நுண்ணறிவை தங்கள் மத சேவைக்காக பயன்படுத்த விருப்பம் காட்டி வருகிறார்கள்.

 ரோபோட்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து கோவில்களுக்குள் நுழைந்து விட்டது.  ஆரத்தி எடுக்கும் ரோபோட், பூஜையின் போது மணி ஆட்டும் ரோபோட்,  என நம் கோயில்களில் ரோபோட்களை பார்த்திருக்கிறோம்.

 அண்மையில் கேரளாவில் யானையைப் போன்றரோபோடை உருவாக்கி அனைவரின் பாராட்டை பெற்றார்கள்.  இதனால் ஒரு கோவிலில் யானை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ரோபோட்  யானை மிகவும்   பக்தியுடன் செய்யும் அதே நேரம் ஒரு யானையை நீங்கள் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்த தேவையில்லை.  விலங்கு நல ஆர்வலர்கள் மிகவும் ஹேப்பி அண்ணாச்சி..

செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்களா இன்னொரு பயன் 

பாதிரியார் வேலையையும் அர்ச்சகர் வேலையையும் இனி

ரோபோட்களை அற்புதமாக செய்துவிடும்.  மசூதிகளில்

இந்த ரோபோட்கள் நல்ல பயன் தரும்.  இந்த மதம் அந்த

மதம் என்றில்லாமல் அனைத்து மதத்திலும் மத

சொற்பொழிவுகள்,  மதவாசிப்புகள் மதக்கருத்துக்களை 

எடுத்துச் சொல்வது,  அதற்கான பதில் சொல்வது,  

மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்வது  என பல வேலைகளை

இனிமேல் ரோபோட்கள் செய்து விடும்.


 ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருட்கள் அல்லது ரோபோட்கள் சமய சடங்குகளுக்கு பயன்படுத்துவதைப் பற்றி கவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வறிஞர்கள்.

இப்போதைக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போல சிந்திக்கும் மென்பொருள் அல்ல இது முழுக்க முழுக்க கணித அடிப்படையிலான மனிதர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்.

 ஒரு பக்கம் பக்தி என்பது நம்முடைய பகுப்பாய்வும் மூளையை கொஞ்சம் அடக்கி உணர்வுபூர்வமான மூளையை முன்னிலைப்படுத்துவது தான்.  மீண்டும் மீண்டும் மதச் சடங்குகளை கேள்வி கேட்காமல் செய்வதைத்தான் நாம் பெரும்பாலும் பக்தி என்று மக்களை நம்ப வைத்து இருக்கிறோம்.  அப்படி என்றால் இந்த ரோபோட்கள் மனிதர்களை விட மிகப்பெரிய பக்திமான்களாக உருவாக வாய்ப்பு இருக்கிறது.


 இதில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என்பதை நாம் கவனித்தால் ஒரு வேலை வருங்காலத்தில் ரோபோட்கள் ஒரு புது கடவுளையோ மதத்தையும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.  ரோபோக்கள் உருவாக்கும் அந்த ரோபோ கடவுள் கண்டிப்பாக சிந்தனை தொடர்பான விஷயங்களுக்கு மிகவும் தூரமானதாக இருக்கும் அதே நேரம் திரும்பத் திரும்ப கமெண்ட் களுக்கு கட்டுப்படும் பல புதிய மதச் சடங்குகளை கூட இந்த ரோபோக்கள் உருவாக்கலாம் என கூறுகிறார்கள்.

மனிதர்கள் சிந்திப்பதை மறந்து பகுத்தறிவதை மறந்து ஒரு எந்திரமாக மாறுவதும்.  ஒரு எந்திரம் கடவுளாக மாறுவதும்  நடக்கும் போது இனி கடவுள் தான் மனிதனாக வேண்டும் அப்படியானால் தான் மனித சமூகத்தை காப்பாற்ற முடியும் போல.. 


Monday, April 17, 2023

இந்தியாவில் தாக்கப்படும் வாடகை கார் டிரைவகளும் , உணவு டெலிவரி நபருகளும்



அதிகாலை 2 மணி தன் உபர் காரை எடுத்து வந்து டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் கஸ்டமர் வருகைக்காகக் காத்திருந்தார். குளிர் அவர் முதுகை சில்லிட செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு செங்கல் அவர் முகத்தைப் பதம் பார்த்தது. இரண்டு பேர் திடீரென வந்து தேவியை தாக்கத் தொடங்கினார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர் ஓட்டி சம்பாதித்த பணத்தை பறித்தனர். தொலைப்பேசியைப் பிடுங்கும் முயற்சியில் அவர் கை உடைந்தது. உபர் நிறுவனத்தின் அவசர உதவிக்குத் தொடர்பு கொண்டார். உபர் நிறுவனம் இரண்டு நாள் கழித்து. தேவி தாக்கப்பட்ட செய்தி பரபரப்பாகிய பின் அந்த எமர்ஜென்சி உதவி அழைப்பிற்கு பதிலளித்தது .

தேவியின் சோக கதையிலிருந்து மீள்வதற்குள் ஐதரபாதில் ரிஸ்வான் என்ற ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் இளைஞர், 23 வயதிருக்கும்.  உணவு டெலிவரி செய்ய மூன்றாம் மாடிக்குச் சென்றார். மாடியில் திறந்துவிட பட்ட நாயிடம் சிக்கிவிட்டார். ஓட வழி இல்லாமல் மேலே இருந்து குதித்துவிட்டார். பலத்த அடி. சில நாட்களில் சிகிச்சையில் இறந்துவிட்டார். அதே நகரில் ஓலா கார் ஓட்டுநருக்கும் வாடிக்கையாளருக்கும் கட்டணத்திற்காக நடந்த வாக்கு வாதத்தில் தாக்கப்பட்ட வெங்கடேஷ் எனும் ஓட்டுநர் கோமாவில் உள்ளார்.


செக்யுரிட்டி, போலிஸ் முதல் கஸ்டமர்கள் வரை தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அவமதிக்கப்படுவதாகவும் டிரைவர்கள், டெலிவரி நபர்கள் புகார் கொடுத்தும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இது போன்ற தாக்குதல்கள் மரணம் வரை செல்கிறது.   

அதுமட்டுமல்ல கஸ்டமர் போல் வண்டியை புக் செய்து தாககி பணம் பறிப்பது, வனடியை திருடுவது. உனவு டெலிவரி செய்ய வருபவர்களை அவமானபடுத்துவது என்பது நடக்கிறது.

உலகம் முழுக்க இவை இருக்கிறது என்றாலும் இந்தியாவில் சாதி மத ரீதியான வெறுப்பும் சேர்ந்துக்கொள்கிறது.ஒரு ஆய்வில் இந்த வேலையில் ஈடுபடும் 3ல் 1 வருவர் இது போன்ற சம்பவங்களை எதிர்க்கொண்டதாக சொல்கிறது.


இந்தியாவில் பல இடங்களில் முஸ்லிம் டெலிவரி ஏஜெண்ட், டிரைவர்கள் என்றால் கஸ்டமர்கள் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். இசுலாமிய டெலிவரி இளைஞர் ஒருவரை வழி மறித்து தாக்கி உணவை எடுத்து சென்றுவிட்டார்கள். போலிஸ் கம்பளைண்ட் கொடுக்கபட்டது அவ்வளவு தான்.

இந்தியாவில் இருக்கும் சில சங்கங்கள் இதை பற்றி குரல் கொடுத்தாலும், நிறுவனங்களிடமிருந்து பெரிய உதவிகள் இல்லை. இவர்கள் தக்காப்பட்டலும் பெரிய இன்சுரன்ஸ் இல்லை. அப்படி இருந்தாலும் இன்சுரன்ஸ் தொகை வாங்குவதற்குள் நிலமை மோசமாகிவிடும்.


இசுலாமிய வெறுப்பு,சாதி ரீதியான அவமானம். தாக்குதல் என்பது இவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவில் 2023ல் சுமார்  2 கோடி பேர் இந்த சர்வீஸ் வேலையில் ஈட்பட்டுள்ளார்கள். இன்னும் பத்தாண்டுகளில் இது மும்மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்களுக்கு அரசு சார்ந்த   பெரிய உதவிகள் இல்லை, போலிஸ் மதிகாது. கஸ்டமர்கள் வெறுப்பார்கள், நிறுவனம் பாதுகாப்பளிப்பதில்லை;. இவை முழுவதும் ஒழுங்கப்படுத்த பட வேண்டும், குறைந்தபட்சம் இவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதற்க்கு.

 





Tuesday, February 21, 2023

3-D BioPrinting: கிட்னி, இதயம் வேண்டுமா Copy, Paste ஒரு Print

 வருங்காலம் ஒருவருக்கு கிட்னி பெயிலியர். மாற்று கிட்னி வேண்டும் மருத்துவமனையில் அவரின் கிட்னியை ஸ்கேன் செய்து அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை ஒரு பயோ பிரிண்டருக்கு அனுப்புகிறார்கள். சிறிது நேரத்தில் கிட்னி ரெடி. அப்படியே அறுவை சிகிச்சை. விஷயம் முடிந்தது. கிட்னி, இதயம், என எந்த உறுப்பாக இருந்தாலும் சில மணித்துளிகளில் ரெடி. இது தான் 3-டி பயோபிரிண்டிங் தொழில்நுட்பம்.



3-டி பிரிண்டிங் எனும் தொழில்நுட்பம் இப்போது மிகப் பிரபலமாகி வருகிறது ’ரெசின்’கள் எனும் ஒருவித சிறப்பு ப்ளாஸ்டிக்களை கொண்டு நீங்கள் ஒரு வரைபடத்தை உள்ளீட்டால் அதை அப்படியே பிரதி எடுத்து ஒரு உருவத்தை உருவாக்கிவிடும். அதாவது பிரிண்ட் செய்துவிடும். இப்போது சிலைகள் எல்லாம் இந்த 3-டி ப்ரிண்ட் எனும் தொழில்நுட்பம் கொண்டு தான் செய்கிறார்கள். இது வளர்ந்து ஒரு வீட்டின் மாடல் கொடுத்தால் காலி இடத்தில் வீட்டையே கட்டி கொடுத்துவிடுகிறது. சரி   ப்ளாசிடிக் ப்ரிண்டிங் போலவே மனித உறுப்புகளை ப்ரிண்ட் செய்ய முடியுமா என நினைத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு தான் இந்த 3-டி ப்ரிண்டிங்கை உருவாக்கி உள்ளது.

நாம் சாதரண பிரிண்டரில் இங்க் பயன்படுத்துவோம், 3-டி ப்ரிண்டரில் ரெசின் போன்றவற்றை ’இங்க்’காக பயன்படுத்துவோம். 3-டி பயோ பிரிண்டரில் என்ன இங்க்?

பயோ-இங்க் என்பார்கள். இதில் உயிரி செல்கள், அதை இணைக்கும் பிற உயிரி புரதங்கள் சேர்த்த ஐட்ரோஜெல் தான் பயோ இங்க்.

இதை எதற்கு பயன்படுத்தலாம்?

இப்போதைக்கு மருந்து தயாரிக்க, மருத்துவம் படிக்க, அறுவை சிகிச்சை பயிற்ச்சி மேற்கொள்ள பயனப்டுத்துகிரார்கள். இதனால் நமக்கு உண்மையான உறுப்புகளை ஆரய்ச்சி செய்த பயனும் கிடைக்கிறது அதே நேரம் ஆபத்தும் இல்லை. வழக்கமாக மருந்துகலை சோதிக்க மிருகங்கள் , மனிதர்கள் என பல சோதனைகள் மேற்க்கொள்ள வேண்டும் இதனால் பல மருத்துவ சிக்கலும், ஆபத்தும் உள்ளதால் அனுமதி கிடைப்பது மருத்துகளை தள்ளி போடும். மாறாக இந்த பயோ பிரிண்டிங் உறுப்புகள் , செல் மாதிரிகள் மீது ஆய்வுகளை நடத்தினால் புரிதலும் கிடைக்கும், பிந்நாட்களில் சோதிக்க போது பல மருத்துவ ஆபத்துக்களை தவிற்கலாம்.

ஆனால் இந்த தொழில்நுட்பத்தை   வளர்த்தெடுப்பதின் மூலம் நாளை மிக எளிதாக உடல் உறுப்புகளை பயோபிரிண்ட் செய்யலாம். இது மனித குலத்தின் மிகபெரும் சிக்கலை தீர்ததாக மாறும். வாழ்வை நீட்டிகவும், கான்சர் மாதிரியான நோய்களில் இருந்து இளம் மரணங்களை தடுக்கவும் உதவும்.  


Monday, February 20, 2023

Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?

 Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?


கடந்த வருடம் டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதிலிருந்தே கோமாளிதனங்கள் உச்சத்தில் சென்றது. அவரின் முட்டாள்தனமான வாதங்களை முன் வைக்கும் டிவிட்கள் பலரை கோபப்படுத்தின. டிவிட்டரில் பணிபுரிந்தவர்கள் ராஜினாமா செய்தார்கள். முதலீட்டாளர்கள் பின் வாங்கினார்கள். மேலும் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் வருங்காலத்தில் டிவிட்டரில் Porn எனப்படும் ஆபாச சமூக வலைதளமாக மாற்றபடலாம் என தகவல் வெளிவந்துள்ளது.


எலன் மஸ்க் தன்னை கருத்து சுதந்திர காவலனாகவும், இறைதூதராகவும் நினைத்துக் கொண்டிருப்பவர். அனைத்து கோமாளிதனங்களையும் இந்த கருத்து சுதந்திரம் எனும் வார்த்தையின் பின் போய் ஒளிந்துக்கொள்வார். இப்போது டிவிட்டர் நிறுவனத்தின் வருமானததை கூட்ட ஏன் ஆபாச படங்களை அனுமதிக்க கூடாது என ஒரு திட்டத்தை சொல்லி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.


இண்டர்நெட்டில் 60சதவீதம் பயன்பாடு போர்ன் எனப்படும் ஆபச படங்கள், சாட்கள் தான். நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும் அதில் எப்படியாவது இந்த ஆபாச தனங்கள் நுழைந்துவிடும். டம்ப்ளர் (Tumblr) எனும் வலைதளத்தை கலை ரீதியான குறும் வலைப்பூவாக டிவிட்டர் போல் மக்கள் பயனப்டுத்த உருவாக்கினார்கள். ஆனால் ஐந்தே வருடத்தில் அது ஆபாச படங்கள், செக்ஸ்டிங் செய்யும் தளமாக மாறியாது. ஆனால் கொள்கை பிடிப்புள்ள டம்ப்ளர் நிறுவனமோ பல லட்சங்கள் செலவு செய்து ஆபாச குப்பைகளை நீக்கி வருகிறது. 


அதே போல் ஒன்லி பேன்ஸ் எனும் வலைதளம் தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பணம் வசூலிக்கும் பேவால் வீடியோ (paywalled Video) எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இதில் ஒரு இசை கலைஞர் இசைத்தோ, பாடியோ தன் திறைமையை வெளிகாட்டும் வீடியோ வெளியிடுவார், விருப்பமுள்ள ரசிகர்கள் அவருக்கு லைவில் பணம் அனுப்பலாம். ஆனால்  செக்ஸ் படங்களில் நடிப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் Cybersex வருமானத்திற்காக இதை பயனப்படுத்த தொடங்க இன்று அது முழு ஆபாச வலைதளமாக மாறிவிட்டது. 

டம்பளர் போராடுகிறது. ஆனால் ஒன்லிபேன்ஸ் நிறுவனமோ இதை ஆபாச வலைதளமாகவே மாற்றிவிட்டது.

இதை மனதில் வைத்து நாம் ஏன் டிவிட்டர் தளத்தில் ஆபாச வீடியோக்களை அனுமதிக்க கூடாது என எலன் மஸ்க் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். எலான் மஸ்க் கடந்த வருடம் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்தார், டெஸ்லா கார் நிறுவனம் சொதப்புகிறது. டிவிட்டரை வாங்குகிறேன் என செய்த அலப்பரையும் நஷ்ட்டம் தான்.   இவரின் கோமாளி  தனங்களை பார்த்தா சுமார் 100 நிறுவனங்கள் டிவிட்டருக்கு விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டது. மொத்த பண தேவையையும் சாமாளிக்க தான் இந்த ஆபாச பட திட்டம்.

டிவிட்டரில் ஏற்கனவே 135 கண்டெண்ட் ஆபாச படங்கள் தான். கருத்து சுதந்திரம் எனும் பெயரில் பல ஆபாச வீடியோக்களை டிவிட்டர் அனுமதிக்க வேண்டும் என எலன் மஸ்க் ஏற்கனவே பச்சை கொடி காட்டிவிட்டார். இப்போது அதை பணமாக்க வேண்டும். ஒன்லி பேன்ஸ் செய்வது போல், வீடியோக்கள் காட்டுபவர்களுக்கு வரும் பணத்தில் ஒரு கமிஷன் வாங்கலாம். Paid DM முறையில் செக்ஸ்டிங் அனுமதித்து ஒரு கமிஷன் பார்க்கல்லாம்  என பல கனவுகளுடன் இருக்கிறார். 


தலையில் அடித்துக்கொள்ளும் தொழில்நுட்ப விமர்சகர்கள், மற்றும் சிலிகான் வேலி செய்தியாளர்கள். இப்படியாவது டிவிட்டர் தளம் ஆபாச குப்பையாகி மக்கள் அனைவரும் டிவிட்டரில் இருந்து  வெளியேறி அது நாசாமாய் போகட்டும் என சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



 


Saturday, February 18, 2023

மரணத்தை வெல்ல Super பணக்காரர்கள் நடத்திய ரகசிய மாநாடு.

 அறிவியல் துணைகொண்டு மரணத்தை வெல்ல முடியுமா? இது தான் உலகின் சூப்பர் பணக்காரர்களின் ஒரே கேள்வி, தேடல். எவ்வளவு பணம் இருந்து என்ன பயன், வயதாகி, மூப்பு வருகிறதே? ஒருநாள் செத்துப் போய்விடுமே என்ற கவலை. அதற்குத் தீர்வு தேடும் ஒரு மாநாடு தான் Longevity Investors Conference. 



Longevity என்றால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தால், மரணத்தை முழுமையாக வெல்ல முடியுமா எனத் தெரியவில்லை, குறைந்தபட்சம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடலாம் தானே? ஆனால் இந்த Longevity Investors Conference சுருக்கமாக LI மாநாடு என்பது வெறும் வாழ்வை நீட்டிப்பது மட்டுமல்ல, வயதாகி மூப்பு வருகிறதே அதை வெல்லவும் தான். இதை Anti Aging என்பார்கள். அதுமட்டுமல்ல  வாழும்போதே புத்துணர்ச்சியுடன் இருக்க Rejuvenating Tech.

இந்த மாநாட்டின் நோக்கமே, மேலே நாம் பார்த்த மூன்று துறைகளில் என்ன ஆய்வுகள் நடக்கின்றன, யாருக்கு முதலீடுகள் தேவை, வருங்காலத்தில் என்ன புது ஆய்வுகள் வரப்போகிறது போன்றவற்றின் தகவல் கிடைக்கும். 


உலகின் முதன்மை பயோடெக் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரும் பணக்காரர்கள் கலந்துகொண்டு விவாதிப்பார்கள். நீங்கள் பணக்காரர்களின் மனதை வென்றால் முதலீடுகள் கிடைக்கும். 

மாநாட்டில் பல நம்பகமான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈஸ்ட் பாக்டீரியா முதல் சில நுண்ணுயிரிகளின் வயதை வெற்றிகரமாகப் பரிசோதனையில் நீட்டியிருந்தார்கள். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் சில வித நொயெதிர்ப்பு-குறைப்பு மருந்துகள் வெற்றிகரமாக ஆயுளை நீட்டிக்க உதவுவதாகக் கூறினார்கள் (25% சதவீதம் தான் அந்த வெற்றி). சில எலிகளுக்கு மனித பதின்வயது இளைஞர்களின் ரத்தம் கொடுத்து ஆய்வு செய்தபோதும், சில நம்பகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் மேலும் விலங்குகள் மனிதர்கள் என்று விரிவடைய வேண்டும். இன்னொரு பக்கம் நன்றாக உடற்பயிற்சி செய்து தசைகளை பலமாக்குங்கள் புத்துணர்ச்சிக்கும், மரணத்தைத் தள்ளிப் போட உதவும்  போன்ற ஆய்வு முடிவுகளும் இருந்தது.


இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிக்கெட் விலை வெறும் 8 லட்ச ரூபாய் தான், அப்படி நீங்கள் கட்ட தயாராக இருந்தாலும் அவர்கள் கவனமாகத் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். புத்துணர்ச்சி அளிக்கும் பானங்கள் , உணவுகள் விருந்திலிருந்தது. உணவின் ருசி வேற லெவல் என்று அதில் கலந்துகொண்ட புட் ப்லாகர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். 

விருப்பமிருந்தால் கலந்துகொள்ளவும் : https://www.longevityinvestors.ch/


AI + UWSN : கடல் தண்ணீருக்குள் வையர்லெஸ் இண்டர்நெட்

பூமியின் கால் பாகம் நிலம் என்றால் முக்கால் பாகம் கடல் தான். கடல் தண்ணீர். இந்த கடல் தண்ணீருக்குள் தொடர்புகொள்ளத் தேவை இருக்கிறது, கடலை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.காரணம்,

  1. கடலில் உள்ள உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ள. கடலை ஆய்வு செய்ய.

  2. கடல் அடியில் உள்ள எரிமலைகளை ஆய்வு செய்ய.

  3. கடல் ஏற்படு சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து கட்டுப்படுத்தக்

  4. கடலில் புதைந்த போன நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்ய,

  5. கடலில் புதைந்துள்ள   இயற்கை வளங்கள், கனிம வளங்களை  மனிதன் பயன்படுத்த.

  6. ராணுவ கண்காணிப்பு செய்ய 

எனக் காரணங்கள் அதிகம். மண்ணில் இண்டர்நெட் தொழில்நுட்பம் பல அசாத்தியங்களை நிகழ்த்தியுள்ள நிலையில், அது போன்ற தங்கு தடையின்றி ஒரு வையர்லெஸ் இண்டர்நெட் கடலுக்குள் அமைந்தால் கடலை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம், கடலின் மர்மங்களை தெரிந்துக்கொண்டுவிடலாம். 


நிலத்தில் இண்டர்நெட் என்பது ஆப்டிகள் பைபர் கேபிள்,விண்வெளியில் சாட்டிலைட்கள், காற்றில் மைக்ரோ வேவ் என்ற மூன்று தொழில்நுட்பங்கள் உதவியுடன் வைர்லெஸ் இண்டர்நெட்டை சாத்திய படுத்தியுள்ளோம். இதில் கவனிக்க வேண்டியது உலக இண்டர்நெட்டை சாத்தியப்படுத்தும் ஆப்டிகள் பைபர் கேபிள்கள் கடலுக்கடியில் தான் செல்கிறது. அந்த கேபிள்களை கண்காணிக்கவும் நமக்கு கடலுக்கடியில் ஒரு தொடர்பு அமைப்பு தேவைப் படுகிறது,.

கடலுக்கடியில் தொடர்பு அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள முதல் சிக்கல். கடல் முழுவதும் ஆப்டிகள் கேபிள் போட முடியாது. சாத்தியமில்லை. காற்றும் இல்லை. சாட்டிலைட்டும் உதவாது. நிலத்தில் உதவும் தகவல் தொடர்பு முறை தண்ணீருக்குள் வேலை செய்யாது.

கடல் தண்ணீருக்குள் தொடர்பு கொள்ள புதிய தொழில்நுட்பம் தேவை அது தான் Underwate Wireless Sensor network.

 இந்த  Underwater Wireless Sensor network சுருக்கமாக UWSN பல் சென்சார் எந்திரங்களைக் கொண்டு அதிக அதிர்வுகள் கொண்ட மைக்ரோவேவ்களை அருகில் இருக்கும் அடுத்த சென்சார் எந்திரத்திற்குச் செலுத்தும்,அதைப் பெற்றுக்கொள்ளும் ஒரு மோடம் அடுத்த எந்திரத்திற்குத் தகவல் அனுப்பும். அப்படியே கடலுக்கு மேலே உள்ள எந்திரத்திற்கு தகவல் கிடைத்தவுடன் அதை அருகில் இருக்கும் கண்காணிப்பு மையத்திற்கு எளிதாக ஆனுப்பிவிடும். 


கடலுக்குக்கடியில் கடலின் தட்பவெப்ப நிலை, அதன் பண்புகள், மாற்றங்கள் எனப் பல தகவல்களை இந்த சென்சார்கள் சேகரித்துக்கொண்டே இருக்கும். 

ஆனாலும் இதில் பல சிக்கல். கடலுக்கடியில்  தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் இந்த தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு கண்காணித்து எந்திரங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இது மனிதர்களாக மட்டும் செய்ய முடியாது. ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை சில நூறு சென்ஸார்கள் என்றால் சாத்தியமே இல்லை. 

   

இந்த சிக்கல் தான் இத்தாலியில் இருக்கும் அகழ்வாராய்ச்சி தலத்திற்கும் வந்தது. இத்தாலியில் உள்ள  ’பேயீ’ நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமான கடற்கரை உல்லாச விடுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். மார்க் ஆண்டனி முதல் ஜூலியஸ் சீசர் வரை பொழுதுபோக்கிற்காக இங்கே வந்து உல்லாசமாக இருந்த நகரம். கடலக்கடியில் மூழ்கிவிட்டது. பிற்காலத்தில் கடலுக்கடியில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி தளமாக மாறிவிட்டது. UWSN மூலம் ஆரம்பக்காலத்தில் ஒரளவு பணிகள் சிறப்பாக நடந்தாலும் இதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல் தலைவலியாகவே இருந்தது. இதற்குத் தீர்வு காண சபீன்ஸா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆய்வாளர் சிஹிராபெட்ரோலி முனைந்தார். அவர் ஆய்வுக் குழுவுடன் பல தீர்வுகளை பரிசோதித்துப் பார்த்தார்கள். அதில் ஒன்று AI உதவியுடன் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். மனிதர்களின் சாத்தியமில்ல தொடர்பமைப்பின் மாற்றங்களைத் தொடர்ந்து கடலை கண்காணித்து அதன் அடிப்படையில் செய்யும் ஏ.ஐ. மென்பொருளை உருவாக்கினார்கள். மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ வசதியுடனான ஒரு UWSN வடிவமைத்து சோத்தி பார்த்தார்கள். வெற்றி. 

இதை W-Sense என்றழைக்கிறார்கள். இதன் உண்மையான தொழில்நுட்ப அமைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, காப்புரிமைக்குக் காத்திருப்பதால் வெளியிடவில்லை. ஆனால் பரிசோதனையாக பேயீ  அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது.


ஆகாயம், காற்று, நிலம் இப்போது நீர் வரை வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை மனிதன் உருவாக்கிவிட்டன. இதனால் பல இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்க முடியும். நெருப்பின் உதவியுடன் ஒரு வையர்லெஸ் தகவல் தொடர்பமைப்பை மனிதன் உருவாக்கிவிட்டால் போதும்..


பின்குறிப்பு:

இந்த கட்டுரையில் UWSN பற்றிய மிக அடிப்படை தொழில்நுட்ப தகவல் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இது முழுமையான தொழில்நுட்ப விளக்கமல்ல..

 

Wednesday, February 15, 2023

AntiViagra: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை Bio weaponஆ ?



ஒருவழியாக ஆண்களுக்கான on- demand கருத்தடை மாத்திரைகளுக்கான சோதனையில் வெற்றி அடைந்துள்ளார்கள் Weill Cornell மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.. 


அனைத்து கருவுற்றலும் மகிழ்ச்சி அளிப்பதில்லை, பல கருவுற்றல் தவறுதலாக நடப்பவை. கருத்தடைக்கு இப்போது பெண்களுக்கான சில மாத்திரைகள், ஆணுக்கு ஆணுறைகள், இருவருக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை மொத்தமாக கருத்தடை ஏற்படுத்திவிடும். பின்னால் விருப்பப்பட்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.


ஒருபக்கம்  குழந்தை பெறு பிரச்சனைக்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்க மறுபக்கம் விரும்பாத,விபத்தாக கருவுற்றலை தடுக்கும் ஆய்வுகளும் நடந்துவருகிறது.


இப்போது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மாத்திரைகள் தற்காலிகமான கருத்தடை ஏற்படுத்தும்.  ஒருநாள் வரை இதன் தாக்கம் இருக்கும். மாத்திரை உட்கொள்ளும் வடிவில் தான். எல்லாம் ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறது. இந்த மாத்திரையை உட்கொண்டால் விந்தணு கருமுட்டையில் நீந்த சிக்னல் கொடுக்கும் Soluble adenylyl cyclase (sAC) எனும் புரதத்தை தற்காலிகாமக தடுத்து நிறுத்துகிறது இதனால் விந்தணு செயலற்று கரு உண்டாகமல் தடுக்கப்படுகிறது.

கிட்டவிட்ட வையாக்ரா மத்திரையின் எதிர்ப்பத வேலை செய்கிறது. இப்போது எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி, அடுத்து முயல் மீது சோதனைகள் நடக்கும். இறுதியாக மனிதர்களுக்குச் சோதனை நடக்கும். ஆனால் Weill Cornell நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே இந்த மருந்துகளை பெருமளவு விளம்பரப் படுத்தி உற்பத்தி செய்ய Sacyl Pharmaceuticals எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்கள். 

வரும் 2050க்குள் உலகின் மக்கள் தொகை 10 பில்லியின் ஆகிவிடும் என கணக்கிட்டுள்ளார் ஒரு வகையில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை மாத்திரை  பல நன்மைகளைக் கொடுக்கலாம். ஆனால் இதன் அரசியல் பக்கத்தை நாம் பார்க்கத் தவறவும் கூடாது. இது bio weaponஆக இன அழிப்புக்கு பயணப்படுத்தப்படுமா? இதன் பக்க விளைவுகள் என்ன? எனப் பல கேள்விகளுக்குப் பதில் வேண்டும் தானே..


வினோத் ஆறுமுகம்

15-02-2023

thiruvinod4u@gmail.com

@thiruvinod4u   


அண்டார்டிகா ஐஸ் கட்டிகளை உருகாமல் காக்கும் பெங்குவின் மலம்

  அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...